11 Sep 2012

கூடங்குளம்:கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின்நிலையத்தில் அணு உலைகளில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்தக்கோரி அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தை தமிழக போலீஸ் தனது அடக்குமுறையால் சின்னாப்பின்னப்படுத்தியது. அணு உலை எதிர்ப்பாளர்களின் கூட்டமைப்பு சார்பாக கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் போராட்டம் நடத்திய சுற்றுவட்டார மக்களை போலீஸ் அடித்து விரட்டியது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் போலீஸை கண்டித்து தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவியான அந்தோணிராஜ்(வயது 48) பலியானார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பல இடங்களில் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே, அணு உலை எதிர்ப்பாளர்கள் திங்களன்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்த நிலையில், முற்றுகையை கைவிடுமாறு காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி கேட்டுக் கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையை கை விட மறுப்பு தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் போராட்டக் குழுவை சேர்ந்த 7 பேர் 2 படகுகளில் கடல் வழியாக சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்பகுதியில், அணுமின் நிலைய சுற்றுச் சுவருக்கு அருகில் இறங்கினர். இத னை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்கச் சென்ற போது, அவர்கள் தாங்கள் வந்த படகில் ஏறி திரும்பிச் சென்று விட்டனர்.
இந்நிலையில் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற இடிந்த கரையை சேர்ந்த டென்சிலின் (வயது 45) உள்பட 2 பேர், போலீசாரின் தடுப்பை மீறி அணுமின் நிலையத் தை நோக்கிச் சென்றபோது அவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர்.
இதனைப் பார்த்த கடற்கரையில் அமர்ந்திருந்த போராட்டக் குழுவினர், டென்சிலின் உள்பட 2 பேரை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். போலீஸ் தடுப் பை மீறி முன்னால் வர முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டும் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிடித்துச் சென்றவர்களை விடு விக்க வேண்டும் என போராட்டக் காரர்கள் கோரிக்கை விடுத்ததால், 2 பேரையும் போலீசார் விடுவித்தனர். போலீஸ் தெருத்தெருவாக மக்களை விரட்டியடித்துள்ளது.
போலீஸ் நடத்திய தாக்குதலில் டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சி சானலின் செய்தியாளர், சத்யம் டி.வி கேமராமேன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. புதிய தலைமுறை டி.வி சானலின் ஒ.பி வேனை போலீஸார் அடித்து நொறுக்கினர். நள்ளிரவிலும் போலீசார் வீடுகள் தோறும் ஏறி இறங்கினர். லத்திசார்ஜ் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் சுமார் 50 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், போலீஸ் தடியடி மற்றும் கண்ணீர்புகை வீச்சில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற முழுமையான விபரம் வெளிவரவில்லை.
ராதாபுரம் தாலுகாவில் கிராமங்களுக்கான மின்சாரத்தை போலீசார் அநியாயமாக துண்டித்துள்ளனர். போலீஸாரின் அடக்குமுறையைக் கண்டித்து போராட்டக் குழுவினர் 48 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். பெண்கள், குழந்தைகள் உள்பட பலருக்கு போலீஸ் தாக்குதலில் காயம் ஏற்பட்டுள்ளது. கூடங்குளத்தில் ஆங்காங்கே சில தீவைப்புச் சம்பவங்களும் நடந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி நகரத்தில் மீனவர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி வழியாக செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில்-தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள மணப்பாடு கிராமத்தில் போராடிய மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவியது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் அந்தோணிராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸாரின் கூடங்குளம் அடக்குமுறைக்கு பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.