டெல்லி மாணவி பாலியல் வன்புணர்வு: பாராளுமன்றம் கொந்தளிப்பு!
19 Dec 2012
புதுடெல்லி:டெல்லியில் பேருந்தில் பயணம் செய்த மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்துக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “பாலியல் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்’ என்று பெரும்பாலான எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
அந்த சம்பவம் குறித்து மக்களவை தலைவர் மீரா குமார், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்பட ஏராளமான பெண் எம்.பி.க்கள், துயரத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினர். மாநிலங்களவையில் சமாஜவாதி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை குறிப்பிட்டுப் பேசும் போது கண்ணீர் மல்கினார்.
மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியபோது, டெல்லி மாணவி பாலியல் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நிலவிய கூச்சல் குழப்பத்தால் மாநிலங்களவை நண்பகலுக்கு முன்னதாக அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மாணவிக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக இரு அவைகளிலும் பதிவான கருத்துக்கள்.
மக்களவைத் தலைவர் மீரா குமார்: இந்த சம்பவம் நாட்டின் அனைத்து சமூகத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுஷ்மா சுவராஜ் (பாஜக): இரவு நேரத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண் மீது பாலியல் கொடுமை நடத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது அவமானத்துக்குரிய விஷயமாகும். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
மாநிலங்களவை: வெங்கய்ய நாயுடு (பாஜக): இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த சமரசமில்லாத அரசியல் உறுதி அவசியம். சம்பவத்துக்கு வெறும் கண்டனமும், இழப்பீடும் வழங்கும் கொள்கைகளும் தீர்வாக அமையாது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.
ரேணுகா சௌத்ரி (காங்கிரஸ்): இதுபோன்ற சம்பவத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறித்து சர்ச்சை எழுப்ப இது நேரம் அல்ல. இதை சமூகத்தின் கூட்டான தோல்வியாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வா. மைத்ரேயன் (அதிமுக): பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அதற்குரிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
திருச்சி சிவா (திமுக): டெல்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்முறை சம்பவம் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை சிறையில் அடைத்தாலும் எளிதில் வெளியே வந்து விடுகின்றனர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
டி.ராஜா (இந்திய கம்யூ.): எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். கட்சி ரீதியிலான கூட்டங்களில் பங்கேற்க செல்லும் போது எனக்கும் பயமாக உள்ளது. இதே போன்ற அச்ச உணர்வுதான் மற்ற உறுப்பினர்களுக்கும் இருக்கும். எனவே இத்தகைய சம்பவங்களைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயா பச்சன் (சமாஜ்வாதி): இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்துள்ளது. இது தொடர்பாக பேசுபவர்கள் சில நாள்களில் அதை மறந்து விடுவர். பாதிக்கப்படும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு? இந்த அவையில் இருந்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என நினைக்கும் போது வருந்துகிறேன். பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தால் தான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும்.
ராம் ஜேத்மலானி (பாஜக): இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று டெல்லி போலீஸ் ஆணையர் பதவி விலக வேண்டும்.
மாயாவதி (பிஎஸ்பி): குற்றவாளிகளை கைது செய்தால் மட்டும் போதாது; கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதற்கு தேவையான சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும்.
இதுபற்றி மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த, அதிக அளவிலான காவல்துறை ரோந்துப் பணிகள் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பணியில் தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
”டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க, உள்துறைச் செயலர் தலைமையில் சிறப்பு செயலாக்கக் குழு ஒன்று அமைக்கப்படும். தற்போது அவையில் பல உறுப்பினர்கள் சிறப்பான யோசனைகளை முன்வைத்திருக்கிறார்கள். அந்த யோசனைகளையும் உள்ளடக்கிய திட்டம் வகுக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
அதேபோல், ஏற்கெனவே கடந்த 4-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிமினல் சட்டத் திருத்தத்தில், பாலியல் வல்லுறவுக்கு எதிரான குற்றங்களுக்கும் தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன’’, என்றார் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே.
இந்நிலையில் டெல்லி பாலியல் வன்புணர்வு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், வெறிப்பிடித்த குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க கோரி டெல்லியிலும் பல்வேறு நகரங்களிலும், கல்லூரி மாணவர்கள், மகளிர் அமைப்பினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.