Thursday, 3 January 2013

பாலியல் வன்கொடுமை இந்தியாவின் தேசிய பிரச்சனையாக மாறிவிட்டது – ஐக்கிய நாடுகள் அவை!

Navaneetham pillai
புதுடெல்லி:வர்க்கம், சாதி வேறுபாடின்றி அனைத்துப் பிரிவு பெண்களையும் பாதிக்கும் விதமாக பாலியல் வன்கொடுமை இந்தியாவில் தேசிய பிரச்சனையாக மாறிவிட்டது என்று ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
பாராமெடிக்கல் மாணவி டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவத்தில் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை கமிஷனர், இப்பிரச்சனைக்கு தேசிய அளவில் தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக சீர்திருத்த நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான சமூக பிரச்சனைகளை ஒழித்த இந்தியாவால் இந்த பயங்கர விபத்தையும் ஒழிக்க முடியும் என்று ஐ.நா மனித உரிமை கமிஷனர் நவநீதம் பிள்ளை கூறினார். மேலும் அவர் கூறியது:
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க விரைவான, அறிவுரீதியான ஆலோசனைகள் தேவை. பொது சமூகத்துடனும், ஐ.நாவின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் பிரிவின் தலைவருடனும் கலந்தாலோசனை நடத்துவதற்கான இந்திய அரசின் முயற்சி பாராட்டத்தக்கது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பெண்களின் விருப்பத்தை பாதுகாக்கும் வகையில் புதிய பொது உணர்வும், ஆக்கப்பூர்வமான சட்டங்களும் தான் தேவை. வன்முறைகளை ஒழிக்க இந்தியா அவசரமாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். டெல்லி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை விதிப்பதில் உடன்பாடு இல்லை. இவ்வாறு நவநீதம் பிள்ளை கூறினார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.