Thursday 11 April 2013

மாலேகான்:ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும்!

maharastra malagan blast
புதுடெல்லி:2006 செப்டம்பர் மாதம் மஹராஷ்ட்ரா மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) விரைவில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்க உள்ளது. இந்த குண்டுவெடிப்பு வழக்கில் மஹராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு படை(ஏ.டி.எஸ்) அநியாயமாக கைதுச் செய்த 9 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளதால் மறு பரிசீலனை குழுவின் அனுமதியுடன் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும். அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு முன்பாக குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும். 2006-செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி மஹராஷ்டிரா மாநிலம் மாலேகானில் மஸ்ஜிதுக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்புகளில் 38 பேர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை ஒன்பது அப்பாவி முஸ்லிம்களை அநியாயமாக கைதுச் செய்து சிறையில் அடைத்தது. பின்னர் இவ்வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐயும் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. ஆனால், 2010-ஆம் ஆண்டு சுவாமி அஸிமானந்தா மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கினை குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானதால், முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுக்களை என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் எதிர்க்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பதுடன், முஸ்லிம் இளைஞர்களை குற்றமற்றவர்கள் என்று விடுதலைச் செய்வதற்கான மனுவையும் என்.ஐ.ஏ அளிக்கும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.