Sunday 2 September 2012

பெங்களூர் to ஹைதராபாத்: ஊடகங்கள் பரப்பும் பயங்கர கற்பனை கதைகள்: பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் தவிக்கும் பெற்றோர்கள்!...

பெங்களூர்:அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் பிரமுகர்களை கொலைச் செய்ய திட்டமிட்டதாகவும்,  சர்வதேச அளவில் செயல்படும் போராளி இயக்கங்களைச் சார்ந்தவர்கள் என்றும் ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளை குறித்து வெளியாகும் பயங்கரமான கற்பனை கதைகளால் நெஞ்சுருகியும், பிள்ளைகளை காணவில்லையே! என்ற ஏக்கத்திலும் கடந்த சில தினங்களாக பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.
புதன்கிழமை காலையில் சாதாரண உடையில் வந்த போலீஸார்,  ஒரு காரணமும் கூறாமல் பிடித்துச் சென்ற தங்களது மகன்கள் குறித்த தகவல் சனிக்கிழமை மாலை வரை பெற்றோருக்கு கிடைக்கவில்லை.
பெங்களூர் சிட்டி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஆஜர்ப்டுத்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை 14 தினங்களுக்கு போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்த செய்தி கூட ஊடகங்களின் வாயிலாகத்தான் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. பெங்களூரில் வாடகை வீட்டில் வசித்திருந்த இளைஞர்கள் குறித்த தகவலை அண்டை அயலார் கூறிய பிறகே பெற்றோருக்கு தெரியவந்தது. புதன்கிழமை காலை முதல் இவர்கள் செல்லாத இடமில்லை. சந்திக்காத அரசு அதிகாரிகளும் இல்லை. மூத்த போலீஸ் அதிகாரிகளின் அலுவலகங்களின் படிகளை ஏறி,  இறங்கியதுதான் மிச்சம்,  எவ்வித பலனும் கிடைக்கவில்லை. என்ன குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன என்பதுக் குறித்த தகவலும் பெற்றோருக்கு போலீசார் தெரிவிக்கவில்லை.
முதல் தகவல் அறிக்கையின்(எஃப்.ஐ.ஆர்)  நகலைக் கூட அளிக்காமல் ஜாமீன் கிடைப்பதற்கான எல்லா வழிகளையும் மூடிவிட்டு போலீஸ் விசாரணை நடத்துகிறதாம். முஸ்லிம் இளைஞர்களுக்காக பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞர் முஹம்மது உஸ்மான், ஜாமீனுக்கு முயன்ற பொழுது நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. போலீஸ் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை என்று உஸ்மான் கூறுகிறார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்ட உதவி கிடைப்பதற்கு எஃப்.ஐ.ஆர் நகல் அத்தியாவசியமானது. அதனை அளிக்காதது தவறான நடவடிக்கை என்று மூத்த வழக்கறிஞர் சி.வி.சுரேஷ் குற்றம் சாட்டுகிறார்.
கடந்த 3 தினங்களாக தங்களது பிள்ளைகளை காணாமல் நெஞ்சில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவியாய் தவிக்கும் பெற்றோர்கள், ஊடகங்கள் தங்களது பிள்ளைகளைக் குறித்து பரப்புரைச் செய்யும் பயங்கரமான கற்பனை கதைகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். போலீஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடாத கற்பனை கதைகளை அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறி ஊடகங்கள்  பொறுப்பற்ற முறையில் வெளியிட்டு வருகின்றன.
டெக்கான் ஹெரால்ட் இதழில் பத்திரிகையாளராக பணியாற்றும் முதீவுர் ரஹ்மான் சித்தீக்கியைக் குறித்து கடுமையான அவதூறுகளை பத்திரிகைகள் பரப்புகின்றன. அவர் தாம் இக்குழுவின் மூளையாக செயல்பட்டார் என்றும்,  பல்வேறு முக்கிய பிரமுகர்களைக் குறித்து அக்குழுவினருக்கு தகவலை அளித்தவர் என்றும் கட்டுக்கதைகள் சரமாரியாக பரப்புரைச் செய்யப்படுகின்றன. தினமணி பத்திரிகையும் முக்கிய செய்தியாக அவதூறுகளை அள்ளி வீசியுள்ளது.
வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட உபைத், பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் மவ்லானா முஹம்மது நஸீருத்தீன் அவர்களின் பேரன் ஆவார். உபைத், தனது பாட்டனாரை அடிக்கடி சந்திப்பார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


விசாரணை முதல் கட்டத்தையே எட்டியுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்பே இந்த இளைஞர்கள் சர்வதேச போராளி இயக்கங்களின் உறுப்பினர்களாக மாறிவிட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் எவ்வித தாக்குதல்கள் சம்பவங்களிலும் தொடர்பு இருப்பதாகவோ,  வேறு எந்தவொரு சிறு குற்றங்களிலும் பங்கிருப்பதாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை. நண்பர்களும்,  அண்டை அயலாரும் இவர்களை குறித்து நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளனர்.
பல்வேறு தீவிர பரிசோதனைகளுக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் டி.ஆர்.டி.ஓவில் அண்மையில் பணியில் சேர்ந்த இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை அவதூறாக குற்றம் சாட்டி கைது செய்தன் மூலம் அந்த இளைஞனின் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கிவிட்டனர். தற்பொழுது அவர் மீது டி.ஆர்.டி.ஓ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாம். முஸ்லிம் இளைஞர்களைக் குறித்து ஊடகங்கள் பரப்பும் அவதூறுகளால் இனி அவர்களுக்கு இந்தியாவின் முக்கிய துறைகளில் வேலைகள் வழங்கப்படுமா என்பதும் கேள்விக் குறியாகியுள்ளது.
உயர் கல்வி கற்ற தனது இரண்டு மகன்களை தீவிரவாதிகளாக சித்தரித்து கைது செய்த போலீசாரின் அராஜக நடவடிக்கைக் குறித்தும், ஊடகங்கள் பரப்பும் கற்பனைக் கதைகள் குறித்தும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரெயில்வே  ஊழியராக பணியாற்றிய எ.எம்.மிர்ஸாவுக்கு கண்கள் கண்ணீரால் நிறைகிறது. டி.ஜி.பி அலுவலகம் முதல் ஆளுநர் மாளிகை வரை இவர் ஏறி,  இறங்கிய போதும் அதிகாரிகளின் உள்ளங்களில் ஈவு,  இரக்கம் ஏற்படவில்லை.
“குற்றவாளியாக இருந்தால் தண்டிக்கட்டும்! நிரபராதிகளாக இருந்தால் உடனடியாக விடுதலைச் செய்யட்டும்! இந்தியாவின் நீதிபீடத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு!”  என்று தனது வேதனைக்கு மத்தியிலும் மிர்ஸா கூறுகிறார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.