Tuesday 16 April 2013

பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு அத்வானியுடன் முலாயமும் உடந்தை – பேனி பிரசாத் வர்மா பரபரப்புக் குற்றச்சாட்டு!

advani mulayam
லக்னோ:சமாஜ்வாதிக் கட்சி தலைவர் முலாயம் சிங் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா. பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியுடன் முலாயம் சிங்கும் இணைந்தே பாபரி மஸ்ஜிதை இடிக்க சதித்திட்டம் தீட்டினார் என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
லக்னோவில் நேற்று(திங்கள் கிழமை) மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா கூறியது: அயோத்தியில் பாபரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் பூஜைகள் செய்வதற்காக ரத யாத்திரையை அத்வானி தொடங்கினார். அந்த யாத்திரைக்கு அப்போது முதல்வராக இருந்த முலாயம் சிங் மறைமுகமாக உடந்தையாக இருந்தார். ஆனால், பூஜைகள் செய்வது ரதயாத்திரையின் நோக்கம் அல்ல. மாறாக, பாபரி மஸ்ஜிதை இடிப்பதுதான் நோக்கம்.
கடந்த 1990-ல் அயோத்தியில் போலீசார் துப்பாக்கி சூடு மேற்கொண்டது தேவையில்லாதது. விருந்தினர் மாளிகையில் காவலில் இருந்த அத்வானி, வினய் கட்டியார், போன்றவர்களை முலாயம் சிங் சந்தித்துப் பேசினார். அப்போது தான் சர்ச்சைக்குரிய இடத்தில் கரசேவகர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது. மோடி நல்லவரா, அத்வானி நல்லவரா என்ற விவாதம் எழுந்துள்ளது.  இருவருமே நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு களங்கத்தை ஏற்படுத்தியவர்கள்.
பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பின் ஏற்பட்ட கலவரங்களுக்கு அத்வானியும், குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்கு மோடியும் தான் பொறுப்பு. இவ்வாறு பேனி பிரசாத் வர்மா கூறினார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.